வெளியுறவுத் துறைச் செயலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கிறார், கொழும்பு
பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் போது, இலங்கையில் அதிகாரப் பகிர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடுகிறார்.
இலங்கை, கொழும்பில் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் போது, இன்று வெளியுறவுத் துறைச் செயலர் வில்லியம் ஹேக் அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்தார். ஒரு அமைதியான மற்றும் உறுதியான இலங்கைக்கு அவரது ஆதரவை வலியுறுத்திய அவர் நீண்ட நிலையான சமாதானத்தை அடைவதில் சிறுபான்மையினர் மற்றும் அனைவருக்குமான மனித உரிமைகளின் பாதுகாப்பு முக்கியமானது என்பதைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் தேர்தல்கள் செப்டெம்பர், 21ஆம் திகதி நடைபெற்றன அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபையை அமைப்பதற்காக ஒரு பாரிய பெரும்பான்மையுடன் வென்றது. இந்தப் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தல்கள் இவையாகும் என்பதோடு அது மூன்று தசாப்த கால மோதல்களின் பின்னர் நல்லிணக்கம் மற்றும் ஒரு நீடித்த அரசியல் தீர்வு என்பவை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.
வெளியுறவுத் துறைச் செயலர் கூறியது:
“இலங்கைக்கான எனது வருகையின் நோக்கங்களில் முக்கியமானதொரு பகுதி தமிழ் சமூக உறுப்பினர்களையும் அதே போன்று மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் கடந்த காலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூற வைத்தலுக்காக இலங்கை முழுவதிலுமாக பணியாற்றுகின்றவர்களை சந்திப்பதாகும். மோதல்களின் பாதிப்புகள் மீது கவனம் செலுத்துவதற்காக செய்யப்பட வேண்டிய பணிகளை தானே நேரில் காண்பதற்காக இலங்கையின் வட பகுதிக்கு பிரதம மந்திரி விஜயம் செய்வதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
“குற்றஞ்சாட்டப்பட்ட யுத்தக் குற்றங்கள் மீது வெளிப்படையான மற்றும் சுயாதீனமான புலன்விசாரணையை நடாத்துவதற்கும், இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இலங்கை அரசாங்கத்திடம் நான் வேண்டிக் கொள்வதுடன் நாட்டின் வடக்குக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குகின்ற ஓர் அரசியல் தீர்வு நோக்கி அரசாங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாக செயற்படுவதற்கும் வேண்டிக் கொள்கிறேன்.”