விளம்பரப் பொருள்

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் (Abdominal aortic aneurysm - AAA) ஆய்வுச் சோதனை, 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கான ஒரு இலவச சோதனை (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 3 ஜூலை 2024

Diagram of a male torso showing the chest, heart, aorta with an aneurysm and abdomen.

1. சுருக்கமான விபரம்

65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கான வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் தொடர்பான ஆய்வுச் சோதனை (AAA ஆய்வுச் சோதனை எனவும் அழைக்கப்படுகின்றது) பற்றிய தகவலை இந்தத் துண்டுப் பிரசுரம் வழங்குகின்றது.

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் (AAA) என்பது என்ன, மற்றும் ஒரு ஆய்வுச் சோதனைக்கு நீங்கள் செல்லும்போது என்ன நிகழ்கின்றது என இது விளக்குகின்றது. நீங்கள் ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்புகிறீர்களா எனத் தீர்மானிப்பதற்கு அது உங்களுக்கு உதவ வேண்டும்.

AAA ஆய்வுச் சோதனை ஒரு இலகுவான, இலவசமான, ஒலிப்படம் (அல்ட்றாசவுண்ட்) மூலமான சோதனையாகும்.

2. யாரை நாங்கள் சோதிக்கிறோம்

அவர்கள் 65 வயதை அடையும்போது, ஒரு ஆய்வுச் சோதனைக்காக என்எச்எஸ் எல்லா ஆண்களையும் அழைக்கின்றது.

3. 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்

முன்னர் ஆய்வுச் சோதனையைப் பெற்றிராத 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு சோதனையை ஏற்பாடு செய்வதற்காக அவர்களது உள்ளூரிலுள்ள சேவையைத் தொடர்புகொள்ள முடியும்.

4. வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம்

உங்கள் உடம்புக்கு இரத்தத்தை வழங்கும் முக்கியமான இரத்த நாளம் தமனியாகும். இது உங்களுடைய இருதயத்திலிருந்து மார்பு வழியாக வயிற்றுக்குச் செல்கிறது.

சிலரில் அவர்களது வயது அதிகரிக்கும்போது, வயிற்றில் தமனியின் சுவர் பலவீனமடையலாம். அதன் பின்னர் அது விரிவடைய ஆரம்பித்து, வயிற்றில் இரத்தக் குழாயில் வீக்கம் ஏற்படுகின்றது.

65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களில் இந்த நோய் நிலைமை மிகவும் பொதுவானதாகும்..

The development of an abdominal aortic aneurysm.

வயிற்றில் ஒரு இரத்தக் குழாய் வீக்கம் விரிவடைதல்

5. வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஒன்றால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்

பெரியளவில் இரத்தக் குழாய் வீக்கம் ஏற்படுதல் அரிதாகும். ஆனால், அது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இரத்தக் குழாய் வீக்கம் பெரிதாகி அது பலவீனமடையும்போது, உட்புறத்தில் இரத்தக் கசிவு ஏற்படலாம். ஒரு இரத்தக் குழாய் வெடிக்கும்போது, 100 பேரில் ஏறத்தாழ 85 பேர் இறக்கிறார்கள்.

ஒரு இரத்தக் குழாய் வீக்கம் சிறிதாக மாத்திரம் இருந்தால், அது ஆபத்தானதல்ல. இருந்தாலும், அது 3 செண்டிமீட்டருக்கும் 5.4 செண்டிமீட்டருக்கும் இடையிலான அளவில் பெரிதாக இருந்தால், அது மேலும் விரிவடைகின்றதா எனப் பார்ப்பதற்கு அதனை நாங்கள் அவதானித்தல் முக்கியமானது.

6. ஆய்வுச் சோதனையின் நன்மைகள்

உங்களுக்கு ஒரு இரத்தக் குழாய் வீக்கம் இருந்தால், அது தொடர்பான நோய்க் குறிகள் எதையும் நீங்கள் அவதானிக்கமாட்டீர்கள். அதன் கருத்து, ஒரு வீக்கம் உங்களுக்கு உள்ளதா என உங்களால் சொல்ல முடியாது. உங்களுக்கு வலி எதுவும் இருக்காது. வேறுபாடு எதையும் நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம்.

நாங்கள் உங்களுக்கு ஆய்வுச் சோதனையை வழங்குகின்றோம். அதன் மூலமாக, இரத்தக் குழாய் வீக்கங்களை நாங்கள் முன்னராகவே கண்டு, அவற்றை அவதானித்து அவற்றுக்குச் சிகிச்சை அளிக்க முடியும். இது இரத்தக் குழாய் வீக்கத்தால் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பெருமளவில் குறைக்கின்றது.

உங்களுக்கு ஒரு இரத்தக் குழாய் வீக்கம் உள்ளதா எனக் கண்டுகொள்வதற்கான மிக இலகுவான வழி உங்கள் வயிறு தொடர்பான அல்ட்றாசவுண்ட் ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்வதாகும்.

ஆய்வுச் சோதனை பெறும் 92 ஆண்களில் ஏறத்தாழ 1 நபருக்கு இரத்தக் குழாய் வீக்கம் உள்ளது.

7. ஆபத்து காரணிகள்

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 6 மடங்கு அதிகளவில் வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கத்தைப் பெறுவதற்கான அதிகளவு சாத்தியம் உள்ளவர்கள். அதன் காரணமாகவே, பெண்களுக்கு இந்த ஆய்வுச் சோதனை கொடுக்கப்படுவதில்லை. வயது அதிகரிக்கும்போது, இந்த இரத்தக் குழாய் வீக்கம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.

பின்வருவன காரணமாகவும் வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஒன்று உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது:

  • நீங்கள் புகைபிடிப்பவர் அல்லது புகைபிடிப்பவராக இருந்துள்ளீர்கள்
  • உங்களுக்கு உயர்வான இரத்த அழுத்தம் உள்ளது
  • உங்கள் சகோதரன், சகோதரி அல்லது பெற்றோருக்கு வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஒன்று உள்ளது அல்லது இருந்துள்ளது.

8. வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஆய்வுச் சோதனை

கருத்தரித்த பெண்களுக்குக் கொடுக்கப்படுவது போன்ற ஒரு இலகுவான அல்ட்றாசவுண்ட் சோதனையை நாங்கள் பயன்படுத்துகின்றோம். இது மிகவும் விரைவானது, மற்றும் வழமையாக 10 நிமிடங்களுக்குக் குறைவாகவே எடுக்கின்றது.

சிகிச்சை இடத்தில் நாங்கள் உங்களின் தனிப்பட்ட விபரங்களைச் சரிபார்த்து, சோதனை பற்றி விளக்கி, ஏதாவது கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பைக் கொடுப்போம்.

படுத்திருந்து, உங்கள் சேட்டை உயர்த்துமாறு அல்லது பொத்தான்களை எடுத்துவிடுமாறு நாங்கள் உங்களைக் கேட்போம். நீங்கள் உங்கள் உடுப்புக்களை அகற்றத் தேவையில்லை. உங்கள் வயிற்றின் மேல் ஒரு குளிரான ஜெல் என்பதை வைப்போம்.

அதன் பின்னர், ஆய்வுச் சோதனைக் கருவியை உங்கள் தோலுக்கு மேலாக நகர்த்துவோம். இந்தச் சோதனை ஒரு திரையில் இரத்தக் குழாய் வீக்கத்தைக் காட்டும். நாங்கள் அதை அளவிடுவோம்.

சோதனையின் முடிவை உடனடியாகவே உங்களுக்குச் சொல்வோம். அதன் பிரதி ஒன்றை உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்துக்கும் அனுப்புவோம்.

9. ஆய்வுச் சோதனையின் சாத்தியமான முடிவுகள்

  • சாத்தியமான முடிவுகள் உள்ளன:
  1. இரத்தக் குழாய் வீக்கம் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை
  2. சிறிய இரத்தக் குழாய் வீக்கம்
  3. நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கம்
  4. ngupa mstpyhhd ,uj;jf; Foha; tPf;fk;

9.1 இரத்தக் குழாய் வீக்கம் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை

உங்கள் இரத்தக் குழாய் வீக்கம் 3 செண்டிமீட்டர்களுக்குக் குறைவான அகலமுள்ளதாக இருந்தால், அதன் கருத்து உங்களுக்கு இரத்தக் குழாய் வீக்கம் இல்லை. பெரும்பாலான ஆண்கள் இந்த முடிவைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பின்னர் சிகிச்சை அல்லது அவதானித்தல் எதுவும் தேவைப்படவில்லை. ஒரு இரத்தக் குழாய் வீக்கம் ஆய்வுச் சோதனைக்கு நாங்கள் உங்களைத் திரும்பவும் அழைக்கமாட்டோம்.

9.2 சிறிய அளவிலான இரத்தக் குழாய் வீக்கம்

உங்கள் வயிற்றிலுள்ள இரத்தக் குழாய் வீக்கம் 3 செண்டிமீட்டர்களுக்கும் 4.4 செண்டிமீட்டர்களுக்கும் இடைப்பட்ட அகலமுள்ளதாக இருந்தால், அதில் உங்களுக்கு ஒரு சிறிய வீக்கம் உள்ளது. அது பெரிதாக வருகின்றதா எனச் சரிபார்த்துக்கொள்வதற்காக, 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சிறிய வீக்கமுள்ள ஆண்களைத் திரும்பவும் ஆய்வுச் சோதனைகளுக்காக அழைக்கிறோம்.  

9.3 நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கம்.

உங்கள் இரத்தக் குழாய் வீக்கம் 4.5 செண்டிமீட்டர்களுக்கும் 5.4 செண்டிமீட்டர்களுக்கும் இடைப்பட்ட அகலமுள்ளதாக இருந்தால், அதில் உங்களுக்கு ஒரு நடுத்தர அளவிலான வீக்கம் உள்ளது. அது பெரிதாகின்றதா எனச் சரிபார்த்துக்கொள்வதற்காக, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கமுள்ள ஆண்களைத் திரும்பவும் ஆய்வுச் சோதனைகளுக்காக அழைக்கிறோம்.

9.4 பெரிய அளவிலான இரத்தக் குழாய் வீக்கம்

உங்கள் இரத்தக் குழாய் வீக்கம் 5.5 செண்டிமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட அகலமுள்ளதாக இருந்தால், அதில் உங்களுக்கு ஒரு பெரிய அளவிலான வீக்கம் உள்ளது. ஆய்வுச் சோதனை செய்துகொள்ளப்படும் 1,000 ஆண்களில் ஏறக்குறைய 1 ஆண் மாத்திரமே ஒரு பெரிய வீக்கம் உள்ளவராக இருக்கிறார். வயிற்றில் பெரிய அளவிலான இரத்தக் குழாய் வீக்கம் உள்ள ஆண்களுக்கு, அதிகளவிலான ஆய்வுச் சோதனைகளை நடத்துவதற்கும் சாத்தியமான சிகிச்சை பற்றி, வழமையாக அறுவைச் சிகிச்சை பற்றி, உரையாடுவதற்குமாக ஒரு விஷேட அறிவுள்ள குழுவுடன் ஒரு நியமனத்தைக் கொடுக்கிறோம்.

10. ஒரு சிறிய அல்லது நடுத்தர இரத்தக் குழாய் வீக்கத்தை அவதானித்தல்  

ஒரு சிறிய அல்லது நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கம் உங்களுக்கு இருந்தால், இந்தக் கட்டத்தில் உங்களுக்கு ஒரு சிகிச்சை தேவைப்படாது. இருந்தாலும், அது பெரிதாக வரும்போது உங்களுக்குச் சிகிச்சை தேவைப்படலாம் என்பதால், வீக்கத்தின் அளவை அவதானித்தல் முக்கியமானது. பெரும்பாலான வீக்கங்கள் மிகவும் மெதுவாகவே பெரிதாக வருகின்றன. அதனால், ஒரு சிறிய அல்லது நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கமுள்ள பல ஆண்களுக்குச் சிகிச்சை ஒருபோதும் தேவையாக இருக்காது.

உங்களுக்கு ஒரு சிறிய இரத்தக் குழாய் வீக்கம் இருந்தால் ஒவ்வொரு வருடமும் அல்லது ஒரு நடுத்தர அளவிலான வீக்கம் இருந்தால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுச் சோதனைகளுக்காகத் திரும்ப வருமாறு நாங்கள் உங்களை அழைப்போம்.

இரத்தக் குழாய் வீக்கம் பெரிதாக வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பது தொடர்பாக, நாங்கள் உங்களுக்கு அறிவுரை அளிப்போம். உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடமும் உங்களுக்கு மாத்திரைகள் தருவதற்கு அல்லது உங்களின் தற்போதுள்ள மருந்துகளை மறுபரிசீலனை செய்வதற்கு விரும்பக்கூடும். உங்களின் இரத்த அழுத்தத்தையும் சரிபார்ப்பதற்கு அவர்கள் விரும்பக்கூடும்.

11. ஒரு பெரிய இரத்தக் குழாய் வீக்கத்துக்குச் சிகிச்சை அளித்தல்

ஒரு பெரிய இரத்தக் குழாய் வீக்கம் இருப்பதை நாங்கள் கண்டுகொண்டால், ஒரு விஷேட குழுவுக்கு நாங்கள் உங்களைச் சிபார்சு செய்வோம். அவர்கள் சில மேலதிகமான சோதனைகளைச் செய்து, ஒரு விஷேட அறிவாளர் சாத்தியமான ஒரு சிகிச்சை குறித்து உங்களுடன் கலந்துரையாடுவார். இது பொதுவாக ஒரு அறுவைச் சிகிச்சையாக இருக்கும். நீங்கள் அதை விரும்புகிறீர்கள் எனத் தீர்மானித்தால், அது வழமையாகச் சில வாரங்களுக்குள் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

வயிற்றிலுள்ள ஒரு பெரிய இரத்தக் குழாய் வீக்கத்துக்குச் சிகிச்சை அளிக்கப்படாதபோது, நீங்கள் வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டியதாக இருக்கலாம். மேலும், பயணக் காப்புறுதி போன்ற ஆரோக்கியம் தொடர்பான காப்புறுதி குறித்துச் சரிபார்த்துக்கொள்ள வேண்டியதாக இருக்கலாம்.

கண்டுகொள்ளப்படும் பெரிய இரத்தக் குழாய் வீக்கங்களுக்கு ஆய்வுச் சோதனையைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிகிச்சை வழமையாக மிகவும் பலனுள்ளதாகும். சிகிச்சை மூலமான ஆபத்துக்கள் உள்ளன. அவை விரிவான முறையில் விஷேட அறிவாளரால் விளக்கப்படும்.

ஒரு பெரிய இரத்தக் குழாய் வீக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஒரு அறுவைச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில்லை.

12. ஆய்வுச் சோதனை மூலமான ஆபத்துக்கள்

ஆய்வுச் சோதனையால் மாத்திரம் ஆபத்து இருப்பதில்லை.

இருந்தாலும், ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு 10,000 ஆண்களில் 41 ஆண்கள் இரத்தக் குழாய் வீக்கத்தைத் திருத்திக்கொள்வதற்கு இறுதியில் அறுவைச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வார்கள். சராசரியில், இந்த 41 ஆண்களில் 1 ஆண் பிழைக்கமாட்டார். ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் இரத்தக் குழாய் வீக்கம் ஒருபோதும் வெடிக்காமல் இருந்திருக்கலாம்.

ஒரு இரத்தக் குழாய் வீக்கம் வெடிக்கும் ஆபத்தை ஆய்வுச் சோதனை முழுமையாக அகற்றுவதில்லை. ஆனால், இந்த நிலைமைக்கு எதிராக, இதுவே சிறந்த பாதுகாப்பு முறையாகும்.

13. வேறு வியாதிகள்  

உங்களுக்கு வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஒன்று உள்ளதா எனப் பார்த்துக்கொள்வதற்கு மாத்திரமே இந்த ஆய்வுச் சோதனை உள்ளது. வேறு வியாதிகள் குறித்து அது பார்ப்பதில்லை. மருத்துவ பிரச்சினை எது பற்றியும் நீங்கள் கவலையடைந்தால், நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்துடன் பேச வேண்டும்.

14. ஆய்வுச் சோதனையின் சரியான தன்மை

இரத்தக் குழாய் வீக்கங்கள் உள்ளனவா எனப் பார்த்துக்கொள்வதற்கான ஆய்வுச் சோதனை மிகவும் நம்பகரமானது. எந்த ஆய்வுச் சோதனையும் முற்றிலும் பலனுள்ளதாக இருக்க முடியாது. ஆனால், ஆய்வுச் சோதனை மூலமாக ஒரு இரத்தக் குழாய் வீக்கம் இருத்தல் கண்டுகொள்ளப்படாவிட்டால், ஒரு மனிதருக்குப் பெரிய அளவிலான இரத்தக் குழாய் வீக்கம் ஏற்படுதல் மிகவும் அரிதாகும்.

சிலவேளைகளில், ஆய்வுச் சோதனை செய்யும் நபர் இரத்தக் குழாய் வீக்கத்தைத் தெளிவாகக் கண்டுகொள்ள முடியாதவராக இருப்பார். இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இன்னொரு சோதனையை, வழமையாக வேறொரு நாளில், பெற்றுக்கொள்ளுமாறு அவர்கள் உங்களைக் கேட்பார்கள்.

15. ரகசியத்தன்மை

சரியான நேரத்தில் ஆய்வுச் சோதனைக்காக உங்களை அழைப்பதற்காக உங்கள் என்எச்எஸ் பதிவேடுகளிலிருந்து தனிப்பட்ட தகவலை என்எச்எஸ் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்கள் பயன்படுத்துகின்றன. நீங்கள் உயர்ந்த தரமான பராமரிப்பைப் பெறுகிறீர்கள் எனப் பார்த்துக்கொள்வதற்கும் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் என்எச்எஸ் இங்கிலண்ட் உங்கள் தகவலைப் பயன்படுத்துகின்றது. உங்கள் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது, மற்றும் பாதுகாக்கப்படுகின்றது மற்றும் உங்களுக்குள்ள மாற்று வழிகள் பற்றி அதிகளவில் கண்டறியவும்.

16. மேலதிக தகவல்

ஆய்வுச் சோதனைக்காக நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், உங்கள் உள்ளூர்

ஆய்வுச் சோதனை சேவைக்கான தொலைபேசி எண் உங்கள் நியமனக் கடிதத்தில் உள்ளது.

உங்கள் உள்ளூர் AAA ஆய்வுச் சோதனை சேவையின் தொடர்பு விபரங்களைக் கண்டுகொள்ளவும்.

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் உட்பட, இரத்தக் குழாய் வியாதிகள் என அழைக்கப்படும் நரம்புகள் மற்றும் தமனிகள் தொடர்பான வியாதிகள் உள்ளவர்களுக்கு,  Circulation Foundation மற்றும் British Heart Foundation ஆதரவளிக்கின்றன.

உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்துடனும் நீங்கள் பேசலாம்.

எவ்வாறு ஆய்வுச் சோதனையிலிருந்தும் விலகுவது எனக் கண்டறியவும்.